Tuesday, 7 February 2012

உருளைக்கிழங்கு சாப்பிடுங்க! இதயநோய் வராது !!

நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு. நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

இதனிடையே தினந்தோறும் இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தநோய் குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இதயநோய் பாதிப்பும் ஏற்படாது என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உருளைக்கிழங்கை வெண்ணெய் அல்லது எண்ணெய் போட்டு சாப்பிடுவதை விட வேக வைத்து உண்ணவேண்டும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் இந்த ஆய்விற்கு பயன்படுத்தப்பட்டனர். ஆய்வின் போது மதிய உணவு நேரத்தில் தினமும் 100 கிராம் அளவு உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. அதேபோன்று இரவு நேரத்திலும் கொடுக்கப்பட்டது. ஒருமாதம் தொடர்ந்து உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர்களின் உயர்ரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

உடல் எடை அதிகரிக்காதது மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களினால் உருளைக்கிழங்கானது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் தங்களது ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

உடலை ஸ்லிம் ஆக்கும் இந்திய உணவுகள்

மஞ்சள்

இந்திய உணவுகளில் மஞ்சளுக்கு தனி மகத்துவம் உண்டு. மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் கொழுப்பு சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை குறைத்து உடல் பருமனில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட மஞ்சள் கொழுப்பு சக்தியை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. இதனால் இதயநோய் ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

கொத்தமல்லி

உடலின் கொழுப்பை குறைப்பதில் கொத்தமல்லிக்கு சிறந்த பங்கு உண்டு. உண்ட உணவை ஜீரணப்பதில் கொத்தமல்லி சிறந்த மூலிகையாக செயல்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை எரித்து உடலை ஸ்லிம் ஆக்குகிறது.

கறிவேப்பிலை

உடலின் கொழுப்பை குறைப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது. கறிவேப்பிலையில் டாக்ஸின்கள் உள்ளன. தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலைகளை உட்கொண்டால் கொழுப்பு படிப்படியாக குறையும். மோர், காய்கறி சாலட், போன்றவைகளில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.

வெள்ளைப்பூண்டு

கொழுப்பை எரிப்பதில் வெள்ளைப்பூண்டுக்கு முக்கிய பங்குண்டு. இது கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே இது உடலின் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடுகு எண்ணெய்

சமையல் எண்ணெயானது உடலில் கொழுப்பு சேருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைப்பு கொழுப்பு அமிலங்கள் உள்ள எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். கடுகு எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடென்ஸ்,வைட்டமின்கள் போன்றவை காணப்படுகின்றன. இது இதயத்திற்கு இதமானது.


முட்டைக்கோஸ்

உடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் உணவுகளில் முட்டைக்கோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் குறைப்பில் சாலட் வகைகளில் முட்டைக்கோஸ் பயன்படுத்தப்படுகிறது. முட்டைக்கோஸ் உடலில் கொழுப்பு, சர்கரை போன்றவற்றை சரிசமமாக தக்கவைக்கிறது.

பாசிப்பருப்பு

பாசிப்பருப்பில் ஏ,பி,சி, மற்றும் ஈ வைட்டமின்கள் உள்ளன. இதில் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. இது குறைந்த கொழுப்பு சத்துள்ள உணவு. உணவியல் நிபுணர்கள் உடல்குறைப்பு தொடர்பான உணவாக பாசிப்பருப்பினை பரிந்துரைக்கின்றனர். இது உயர் ரகமான நார்ச்சத்து கொண்டுள்ளது. உடலில் ரத்த அழுத்தம் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது.

தேன்

உடல்பருமனை குறைப்பதில் தேனின் பங்கு முக்கியம்மானது. தினமும் காலை நேரத்தில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் பருமன் குறையும்.

மோர்
உடலுக்கு தேர்வையான நீர் சத்தை அளித்து, கொழுப்பை குறைப்பதில் மோர் முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான கலோரிகளை மட்டுமே அளிக்கும் தன்மையுடையது என்பதால் தேவையற்ற கொழுப்பை உடலில் தங்கவிடாது.

சிறு தானியங்கள்

நார்ச்சத்து நிறைந்த கம்பு, சோளம், ராகி, தினை போன்றவை உடம்பில் கொழுப்பை ஏற விடாது. விலைகுறைவானதும் சத்து நிறைந்த்துமான இந்த தானிய உணவுகளையே பண்டைய காலத்தில் உணவாக உட்கொண்டனர்.

பட்டை, கிராம்பு

கறி சமையலுக்கு வாசனைக்காக பயன்படுத்தப்படும் பட்டை, கிராம்பு போன்றவை கொழுப்புச்சத்தை குறைக்க வல்லது. கெட்ட கொழுப்பினை உடம்பில் தங்கவிடாமல் செய்து, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துகிறது.



Friday, 3 February 2012

முத்தமிட்ட கணத்தில்

நீ

முத்தமிட்ட கணத்தில்

முளைத்த மன நடுக்கத்தில்

சூரியன் ஒளிய

காற்று உறைய

இதயம் மட்டும்

புவியீர்ப்பு விசையைப்

புறக்கணித்துப் பறந்தது.




இன்னோர் முத்தமிடு

நான்

இறங்கி வர வேண்டும்.

தோழி


தோழி

அன்புக்கு இன்னொரு தாய்

கண்டிக்க இன்னொரு தந்தை

சொந்தம் கொண்டாட இன்னொரு உறவினன்

வழி காட்டும் இன்னொரு ஆசான்

வம்பிலுக்கும் இன்னொரு சகோதரி

முகம் புதைக்க வந்த தலையணை

வருடி செல்லும் இன்னொரு தென்றல்


நான் இருண்ட வேளைகளில் ஒளி கொடுக்கும் மின்னல்

விமர்சிக்க ஒரு விமர்சகன்

என்னை சிரிக்க வைக்கும் இன்னொரு கோமாளி

என்னை அழ வைக்கும் இன்னொரு காதலி

என் செயல்களை கண்காணிக்கும் அந்தரங்க உளவாளி

என்னை சரியாய் வழிநடத்தும் வழிகாட்டி

நான் சுவாசிக்க வந்த மாற்று ஆக்ஸிஜன்

எனக்கு ஆற்றல் தரும் இரண்டாம் சூரியன்

நான் நடந்து செல்ல போடப்பட்ட பாதை

என் சிலுவைகளை சுமக்கும் என் கர்த்தர்

என்னை சுமக்கும் இரண்டாம் கருவறை

நான் மறைந்து கொள்ளும் மறைவிடம்

நான் வாழ இன்னுமோர் உறைவிடம்

எனக்காக அழும் இன்னொரு வானம்

எனக்காக சிரிக்கும் இன்னொரு நட்சத்திரம்

என்னை உயிர்பிக்கும் சஞ்சீவினி

எனக்காக மட்டும் இறைவம் படைத்த


இன்னொரு உலகமே என் தோழி

கடவுள் இருக்கிறாரா...? - சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதை!

நேற்றைய விழாவில் 'கடவுள் இருக்கிறாரா... இல்லையா...' என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன குட்டிக் கதை, அனைவரையும் கவர்ந்தது.

மேலும் கண்ணதாசன் நாத்திகராயிருந்து ஆத்திகராக மாறியது குறித்து ரஜினி சொன்ன ஒரு காரணம் இதுவரை பலருக்கும் தெரியாத விஷயம். அதை எழுத்தாளர்கள் பலரும் வியப்புடன் கேட்டனர்.

அந்தக் கதை:

"ஆண்டவன் இருக்கான்... இல்லேன்னு யுகம் யுகமா பேசிக்கிட்டிருக்காங்க. வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் சண்டை வருது. வசிஷ்டர் வாயால நான் பிரம்ம ரிஷி பட்டம் வாங்கறேன்னு. விஸ்வாமித்திரர் ஒரு அகோரி. கடவுள் நம்பிக்ககை இல்லாதவர். வசிஷ்டர் சாஸ்துவோக்தமா... கடவுள், கைலாசம், வைகுந்தம், வேதம் அப்டி போறவரு. விஸ்வாமித்திரர் கடவுளை நம்பாதவர், பஞ்ச பூதங்களை நம்புறவர். அப்படிப்பட்ட விஸ்வாமித்திரர் வசிஷ்டரிடமிருந்து பிரம்ம ரிஷி பட்டம் வாங்கினார். ஆக அந்த காலத்திலேருந்தே கடவுள் இருக்கானா இல்லையான்னு விவாதம் நடந்துகிட்டுதானிருக்கு.

இப்ப ரீசன்டா, டிடி ரங்கராஜனோட டிஸ்கோர்ஸ் பார்த்தேன். அவர் ஒரு சம்பவம் சொல்றார். அவர் அமெரிக்காவில் ஒரு ட்ரெயின்ல ஒரு சயின்டிஸ்ட். அவருக்கு முன்னால கொஞ்சம் சின்ன வயசு... பைபிள் படிச்சிக்கிட்டிருக்கார்.

உடனே சயின்டிஸ்ட் அந்த இளைஞரிடம், 'என்ன பண்றீங்க'ன்னு கேக்கறார். உடனே பைபிள் படிச்சிக்கிட்டிருக்கேன்னு சொல்றார்.

'இல்ல, என்ன வேலை செய்யறீங்கன்னு' கேக்கறார்.

உடனே 'சயின்டிஸ்ட்' என்கிறார் இளைஞர்...

'ஓ.. சயின்டிஸ்டா, சரி என்ன படிச்சிக்கிட்டிருக்கே'...

'பைபிள்'.. அப்படீன்னு இளைஞர் சொல்றார்.

உடனே, 'ஏம்பா, அறிவிருக்கா... இது சயின்டிபிக் யுகம், சயின்டிபிக் காலம், எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்... நீயும் சயின்டிஸ்ட் என்கிறாய். இன்னும் நீ மதம், கடவுள், பைபிள், கிறைஸ்ட்டுனு படிச்சிக்கிட்டு உட்காந்திருக்கியே, நாமளே இப்படி உட்கார்ந்துட்டா, எப்படி நாடு முன்னேறும். மக்கள் என்ன ஆவறது. கொஞ்சமாவது அறிவை வளத்துக்க வேண்டாமா.. இனிமேலாவது இந்த புக்கு, பைபிளையெல்லாம் தூக்கி போடு, கடவுளு, மண்ணாங்கட்டின்னு' சொல்லிட்டார்.

'சரி'..ன்னு கேட்டுக்கிட்டார்.

'நீ ப்ரீயா இருக்கும்போது என்னை வந்து பார். இந்தா என் கார்டு... பேசலாம்ட-னு சொல்றார் சயின்டிஸ்ட்.

ஸ்டேஷன் வந்ததும், இறங்குறாங்க. கிளம்பும்போது, 'சரி, நான் என்னை உன்கிட்ட அறிமுகப்படுத்திக்கிட்டேன். நீ உன்னை என்கிட்ட அறிமுகப்படுத்திக்கவே இல்லையே'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.

உடனே, அந்த இளைஞர் தன் கார்டை கொடுக்கிறாங்க. அதை திருப்பி பார்த்தா, அது தாமஸ் ஆல்வா எடிசன்!

உடனே அந்த சயின்டிஸ்ட், 'சார் மன்னிக்கணும்... நீங்க எனக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுக்கணும். உங்களைப் பார்க்கணும்னு', கேட்கிறார்.

'சரி வாங்கன்னு' சொல்லி டைம் கொடுத்தார் எடிசன். அந்த டைமுக்கு தாமஸ் ஆல்வா எடிசன் லேபுக்கு இந்த சயின்டிஸ்ட் போறாங்க.

அந்த லேபுல, ஒரு பெரிய சோலார் சிஸ்டம் மாடல் ஒன்றை தாமஸ் ஆல்வா எடிசன் செஞ்சு வச்சிருக்கார். அதைப் பார்த்துவிட்ட சயின்டிஸ்ட், 'என்ன சார்.. இவ்வளவு அருமையா இருக்கு, இதை யார் செஞ்சாங்க, எத்தனை பேர் செஞ்சாங்க, பார்ட்ஸ் எங்கே கிடைச்சது'.. ன்னு கேட்டார்.

அதற்கு தாமஸ் ஆல்வா எடிசன், 'திடீர்னு ஒரு நாள் கதவைத் திறந்து பார்த்தேன். இந்த மிஷின் இருந்துச்சி'ன்னு சொல்றார்.

'சார், தமாஷ் பண்ணாதீங்க. நான் சீரியஸா கேக்கறேன். இதை எப்படி செஞ்சீங்க'ன்னு கேக்கறார் சயின்டிஸ்ட்.

'இல்லப்பா.. உண்மையிலேயே நான் ஒண்ணும் பண்ணல. திடீர்னு கதவை திறந்து பார்த்தேன். இது இங்கே இருந்தது'...ன்னு எடிசன் சொன்னாங்க.

'சார்... சீரியஸாவே நான் கேக்கறேன்.. நான் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்... சொல்லுங்க'ன்னு கேட்டார் சயின்டிஸ்ட்.

'ஏம்ப்பா... நீங்க சயின்டிஸ்ட்டுங்க.. திடீர்னு ஒரு நாள் காஸ்மோஸ் (பிரபஞ்சவெளி) உருவாச்சின்னு சொல்றீங்க. திடீர்னு காஸ்மோஸ் உருவாகும்போது, இது உருவாகக் கூடாதா? கிரியேஷன்... Where there is a creation there should be a creator... படைப்பு இருந்தா, படைப்பாளி இருந்துதான் ஆகணும். Without the creator there is no creation. So கடவுள் இருக்கார்!', சயின்டிஸ்ட் சைலன்ட் ஆகிட்டார்.

இதை ஏன் சொல்றேன்னா... இது வந்து நடந்ததா இல்லையா என்பது வேறு.. தாமஸ் ஆல்வா எடிசன் அங்கே இருந்தாரா இல்லையான்றது டிஃப்ரன்ட்... சொன்னவர் இதை எங்கேயாவது படிச்சிருப்பார் டெபனிட்டா...

ஆனா, இதை எழுதினவர் என்ன சொல்ல விரும்பினார்... கடவுள் இருக்கார்னு சொல்றதுக்கு, இவர் இந்த சப்ஜெக்டை எடுத்துக்கிட்டார். இதுக்கு இந்த சிச்சுவேஷன் கிரியேட் பண்ணார். இதுக்கு ரெண்டு சயின்டிஸ்டை உருவாக்கினார். தாமஸ் ஆல்வா எடிசனை கொண்டு வந்தார். அவர் வாயால சொல்ல வச்சதாலதான், இது இந்த அளவு ஆழமா இது போகுது. இதான் ரைட்டருடைய வேலை. அந்த எழுத்தோட்டம் இருக்கு பாருங்க... அது ப்யூட்டிபுல்.

இந்த மாதிரி ஒரு ஓட்டத்தை நான் ராமகிருஷ்ணனிடம் பார்த்தேன். புதுசா இருக்கு. கண்டுபிடிக்கிற சிச்சுவேஷன்ஸ் டிஃபரெண்டா இருக்கு. பாத்திரங்கள் வித்தியாசமா இருக்கு. ஒண்ணொன்னும் வித்தியாசமா இருக்கு. எழுத்துங்கறது எவ்வளவு பவர்புல்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நிலை இல்லை!

கம்ப ராமாயணத்தை கொளுத்த முயன்ற கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் கொஞ்சகாலம் நாத்திகராக இருந்தார். அப்போ, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். கெரசின், தீப்பெட்டி, கையில் கம்பராமாயணம்... கொளுத்த வேண்டியதுதான் பாக்கி. ஒரு நிமிஷம் யோசிச்ச கண்ணதாசன், சரி... அப்படி என்னதான் இருக்கு இதுல. ஒருவாட்டி படிச்சுட்டு எரிச்சிடலாம்னு, படிக்க முயன்றார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்த பிறகு, அந்தப் புத்தகத்தை வைத்து அதன் முன் விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறிட்டார்!

படைப்பாளி கஷ்டப்படக் கூடாது!

எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். படைப்பாளி கஷ்டப்படக்கூடாது. அவர்களா நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும். நல்ல சூழலில் இருக்க நாமெல்லாரும் துணை நிற்க வேண்டும்," என்றார்.

இரவு நேர கார் பயணம்: முட்டை ரூபத்தில் வரும் பேராபத்து

இரவு நேரத்தில் காரில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்வதற்கும், விரும்பதகாத சம்பவங்களில் ஈடுபடுவதற்கும் புதிய யுக்தி ஒன்றை சமூக விரோதிகள் கையாள்வது குறித்து செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

இரவு நேரங்களில் செல்லும் கார்களின் முன்பக்க கண்ணாடி (வைன்ட் ஷீல்டு) மீது முட்டையை வீசி எறிந்து காரை நிறுத்தி அவர்கள் வழிப்பறியில் ஈடுபடுவதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.

எனவே, இரவில் காரில் செல்லும்போது காரின் முன்பக்க கண்ணாடி மீது முட்டை வீசினால் உடனடியாக காரை விட்டு இறங்கி சோதனை செய்ய வேண்டாம்.

மேலும், காரின் கண்ணாடியை துடைப்பதற்காக நீரை பீய்ச்சியடித்து, வைப்பரை ஆன் செய்து சுத்தம் செய்ய முற்பட வேண்டாம். ஏனெனில், முட்டையுடன் நீர் சேரும்போது பிசின் போன்று ஆகிவிடும். அப்போது வைப்பரை ஆன் செய்தால் கார் கண்ணாடி முழுவதும் பனிப்படர்ந்தது போன்று முட்டை படிந்து விடும்.

இதனால், சாலை பார்த்து தொடர்ந்து காரை ஓட்ட முடியாத நிலை ஏற்பட்டு விடும். இந்த சந்தர்ப்பத்தைத்தான் சமூக விரோதிகள் பயன்படுத்தி வழிப்பறி மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

எனவே, இரவு நேரத்தில் காரில் செல்லும்போது மர்மநபர்கள் கார் கண்ணாடி மீது முட்டையை வீசி எறிந்தால், உஷாரடைந்து அங்கிருந்து பாதுகாப்பானை இடத்துக்கு காரை ஓட்டி செல்வதுதான் சிறந்தது.

Tuesday, 24 January 2012

அன்பா இருங்க, மன அழுத்தம் போகும்!

மன அழுத்தம், டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்கா மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கைப் பற்றிய பயமும் இள வயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

அதிக சந்தோசம் அதிக கவலை

பெரும்பாலான குழந்தைகள் அதிக சந்தோசம், அதிக கவலையினால் பீடிக்கப்படுகின்றனர். இதற்கு மேனிக் டிப்ரசன் என்று மருத்துவ உலகினர் பெயரிட்டுள்ளனர். இதனால் குழந்தைகளின் மூட் எந்த நேரத்தில் எப்படி மாறும் என்று கண்டுபிடிக்க முடியாததாகிவிடுகிறது. நார்மல் போல தெரிந்தாலும், ஒருசில சமயங்களில் அதீத மகிழ்ச்சியுடன் உற்சாகமாக திரிகின்றனர். சில சமயங்களில் அதீத கவலையுடன் சோகத்தில் மூழ்கி

விடுகின்றனர். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்த ண்ணம் இருக்கின்றனர். இதனால் பள்ளிகளில் கவனிக்கும் திறன் குறைகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம் என்று தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

எளிமையான எதிர்பார்ப்பு

கவுன்சிலிங், உளவியல் ரீதியான சிகிச்சை போன்றவற்றையும் அளிக்கலாம். அதேசமயம் இள வயதினருக்கு குரூப் சைக்கோ தெரபி என்னும் சிகிச்சை முறையினை கையாண்டு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த பழக்க வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சத்தான உணவு அவசியம்

குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு கொடுக்கப்படுகிறதா என்பதை உணவியல் வல்லுநர்களிடம் ஆலோசகரிடம் உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தவறான உணவு பழக்கம் வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும். இதே போல் பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் மேற்கத்திய உணவுகள் மீதான ஆர்வத்தை குறைப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

குழந்தைகளுக்கும் துரித உணவு மற்றும் உடல்நலத்துக்கு ஒவ்வாத புதிய புதிய உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை நாமே வளர்க்காமல், அவர்களுக்கு பிடித்த ஆரோக்கியமான உணவுகளை அவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம். இதன் மூலம் சத்தான உணவுப் பழக்கம் ஏற்படுவதுடன் தேவையற்ற உடல் பிரச்னைகளை தடுக்க முடியும். அஜீரணம், உடல் எடை அதிகரிப்பு, குடல் மற்றும் வயிற்றுப் புண் ஏற்படுதல், போன்றவற்றை தடுக்கலாம்.

நட்பான சூழல் அவசியம்

வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே இளம் வயதிலே வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.

நோய்கள் தரும் மன அழுத்தம்

குழந்தைகளின் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு, ரத்தத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு பிரச்னைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட நோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் வாய்ப்பாக அமையும்.

நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது மற்றும் அடுத்தவர் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் மட்டுமே மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். இந்த பழக்கங்களை சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள் இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து குழந்தைகளை காக்க முடியும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும்.