Friday, 20 January 2012

உங்களுக்காக சில மணித்துளிகள் ...!

அதிகாலையில் எழுந்து பரபரப்பாக அலுவலகம் செல்லும் நகர வாழ்க்கையில் தினம் தினம் ஒரே மாதிரி செய்வது போராடித்து விடும். இதனால் உடலும், மனமும், சோம்பிவிடும். மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் புத்துணர்ச்சி பெற அன்றாடம் செய்யும் அலுவல்களை சற்றே மாற்றி செய்ய வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். இது நமது வாழ்க்கையையே மாற்றும் வல்லமை படைத்தது என்கின்றனர்.

ஜூஸ்க்கு வெல்கம், காபிக்கு பை

நகர்புறங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகாலையில் எழுந்து காபி குடிப்பது தினசரி பழக்கமாகிவிட்டது. தினம் தினம் காலையில் எழுந்து காபி குடிப்பது போரடிப்பதோடு உடல் நலத்திற்கும் உகந்ததல்ல எனவே காபிக்கு பதிலாக ஜூஸ் குடிப்பது நல்லது என்கின்றனர். இதனால் உற்சாகத்தோடு உடலும் நலமாகும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

எழுதுங்கள் நல்லது

கணினி மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கையில் பேனா பிடித்து எழுதுவது என்பதே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. வீட்டிலும், அலுவகத்திலும் எழுதுவது என்பது மாறி, டைப் செய்வதே அவசியம் என்றாகிவிட்டது. எனவே ஒரு மாற்றத்திற்கு பேனா பிடித்து நோட்டு புத்தகங்களில் எழுதி பார்ப்பது நல்லது. ஒவியராக இருந்தால் அழகான ஓவியம் ஒன்றை வரைவது மனதிற்கு மாற்றத்தை தரும். தினசரி போரான வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.

பிறந்தநாளுக்கு ஒரு மரம்

ஒவ்வொரு பிறந்தநாளின் போது ஒரு மரம் நடுவதை திட்டமாக வைத்துக்கொள்ளவேண்டும். இது நமது வாழ்க்கைமுறையையில் நல்ல தொரு மாற்றத்தை ஏற்படுத்தும். இது சுற்றுச்சூழலுக்கு நன்மை தருவதோடு மனதிற்கும் மகிழ்ச்சியை அளிக்கும். மரம் வளர்ப்பது ஆத்ம திருப்தியை ஏற்படுத்தும்.

மனதிற்கு இதமான பயணம்

வாரம் ஒருமுறையாவது காரை விடுத்து பேருந்தில் பயணம் செய்யலாம். தனியாக சென்று பழகிய நமக்கு சக அலுவலக நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தில் பயணிப்பது மகிழ்ச்சியான மாற்றத்தை தரும். இதனால் பெட்ரோல் மிச்சப்படுவதோடு சுற்றுச்சுசூழலுக்கும் நன்மை செய்தது போலாகும்.

நமக்காக ஒருநாள்

தினம் 24 மணி நேரத்தையும், அலுவலகம், வாழ்க்கைத்துணை, கேர்ள்பிரண்ட், குடும்பம், செல்லப்பிராணிகள் என அனைவருக்காகவும் நேரத்தை செலவழிக்கிறோம். நமக்காக என்று சிலமணித் துளிகள் கூட செலவழிப்பது கிடையாது. எனவே நம்முடைய மனதை புத்துணர்ச்சியாக்க நமக்காக சில நிமிடங்களை தினசரி செலவழிக்க வேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

ஞாயிறை வீணாக்க வேண்டாம்

விடுமுறை நாளான ஞாயிறு என்பது வீணாக்க அல்ல. எந்த ஒரு இடையூறும் இன்றி அந்த நாளை கழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த வாரத்திற்கான தினங்களை புத்துணர்ச்சியோடு கழிக்க முடியும்.

சிரிப்பு மருந்து

சிரிப்பு என்பது மிகச்சிறந்த மருந்து. தினமும் இறுக்கமாக இருப்பதை கலைக்கவும், மனஅழுத்தம், வலிகளை மறக்கவும், சிரிப்பு உதவுகிறது. மனது விட்டு சிரித்தால் கவலைகள் மறக்கப்படும். எனவேதான் வாய்விட்டு சிரிக்க உளவியல் வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

புத்துணர்ச்சி தரும் இசை

இதமான இசையை கேட்பது மனதிற்கு புத்துணர்ச்சி தரும். அமைதியான முறையில் இசையை கேட்பது மன அழுத்தம் தரும் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தும், எனவேதான் அன்றாட அலுவல்களினால் ஏற்பட்ட சிக்கல்களை களைய இசையை கேட்க வலியுறுத்துகின்றனர் உளவியலாளர்கள்.

நடத்தல் அவசியம்

வாக்கிங் என்பது உடலுக்கு புத்துணர்ச்சி தரும். இது நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதனால்தான் மருத்துவர்கள் நடப்பதின் அவசியம் குறித்து வலியுறுத்துகின்றனர். வீட்டிற்குள்ளேயே டிரட்மில் வைத்து வீட்டிற்குள் நடப்பதை விட திறந்த வெளியில் நடக்க வலியுறுத்துகின்றனர்.

தினம் ஒரு நற்செயல்
இன்று புதிதாய் பிறந்தோம் என்பதைப்போல தினம் ஏதாவது ஒரு நன்மை, யாருக்காவது ஒரு உதவி செய்யவேண்டும். அது மனதிற்கு புத்துணர்ச்சி தருவதோடு வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை தரும்.

போதையை துறந்தால் இளமையை தக்கவைக்கலாம் ....

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் ஆண்களில் சிலர் ஜம் மென்று அழகாக காட்சியளிப்பர். அதைப்பார்த்து பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இளமையை தக்கவைத்துக்கொள்ள என்னதான் சாப்பிடுகிறாரோ? என்று நினைப்பதும் உண்டு. பெண்களுக்கு மட்டும் தான் அழகு குறிப்பா? எங்களுக்கெல்லாம் கிடையாதா என்று ஏங்கும் ஆண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ்.

நமது வயதை முதலில் வெளிப்படுத்துவது சருமம் தான், அதனை ஒழுங்காக, சீராக பராமரித்தாலே நமது இளமை நீடித்திருக்கும். பெண்களின் சருமத்தை காட்டிலும் ஆண்களின் சருமம் 20 சதவிகிதம் கூடுதல் கடினத்தன்மையுடன் இருக்கும். ஆயினும் வயது கூடும்போது கொல்லாஜன் எனும் புரதம் குறைவதால் சருமத்தில் சுருக்கம் ஏற்படுகிறது. உடல் கூறுவியலின்படி பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு முதிர்ச்சி சில காலத்திற்கு பிறகு தான் தோன்றும், ஆனால் ஒரு சில பழக்கவழக்கங்களினால் ஆண்களுக்கு இயல்பான வயதை காட்டிலும் முதுமையான தோற்றம் காணப்படுகிறது.

ஆண்கள் அதிக அளவில் சூரிய வெளிச்சத்தில் பயணிப்பதாலும், மாசுள்ள காற்றை சுவாசிப்பதாலும் சருமம் பாதிக்கப்படுகிறது. எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்வதாலும், சருமத்தில் முதுமை தோற்றம் தெரிகிறது. இதனை தடுக்க, முகத்தை பாதுகாக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தண்ணீர் மருத்துவம்

இளமையை தக்கவைப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்குண்டு. சருமத்தை மென்மையாக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் தினம் 6 டம்ளர் தண்ணீர் பருகுவது அவசியம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

தொடர்ந்து ஷேவிங் செய்வதன் காரணமாக முகத்தில் முதிர்ச்சி தோன்றும், அதனால் ஈரப்பதத்துடன் கூடிய ஷேவிங் கிரீமை பயன்படுத்துவது நல்லது. மேலும் ஷேவிங் செய்யும்போது முடிகள் வளர்ந்திருக்கும் திசையில் ஷேவ் செய்து, வெதுவெதுப்பான தண்ணிரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வாறு செய்தால் முகம் வாடாமல் புத்துணர்ச்சியுடன் தோன்றும்.

ஆன்டி ஆக்ஸிடென்ட் உணவுகள்

ஆண்கள் என்றும் இளமையுடன் இருக்க தொடர்ந்த உடற்பயிற்சியும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், உடலுக்கு குளிர்ச்சி தரும் இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் திசுக்களை புதுப்பிக்கும் திறனுடைய ஆன்டிஆக்ஸிடன்ட் குணம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால், முகம் சுருக்கம் இல்லாமலும் மென்மையாகவும் காணப்படும். மேலும் பசலை கீரை, அவுரிநெல்லிகள், கேரட், தக்காளி, பச்சை தேநீர் போன்றவற்றையும் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.

புகை, மது கூடாது

சருமத்தை இளமையுடன் வைத்திருக்க மது மற்றும் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் உடலின் இரத்த ஓட்டத்தை குறைப்பதால் சருமத்திற்கு தேவையான சத்துகள் கிடைக்காமல் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் வயதான தோற்றம் எளிதில் வருகிறது.

ஆழ்ந்த உறக்கம்

சரியான உறக்கம் இல்லாமல் இருப்பதால் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதை அநேகமானோர் அறிவதில்லை. அது சோர்வையும், இளமையையும் பாதிக்கும். இரவில் குறைந்தது 6-7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் அவசியம் என்பதும் இதைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் மனதில் புத்துணர்ச்சி மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திலும், சருமத்திலும் பொலிவு ஏற்படும்.

மகிழ்ச்சியே இளமைக்கு வழி

இது தவிர, உடல் ஆரோக்கியத்திற்கும், தாம்பத்ய உறவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆரோக்கியமான உறவு இளமையை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்திற்கும் மேலாக, ஆண்கள் தனது கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் இருந்தாலே, முகத்தில் பொலிவும் இளமையும் கூடும். அப்புறம் பாருங்கள் நீங்களும் ஆணழகன் தான்.

Friday, 13 January 2012

ஏழு பிறவியிலும் என்னுடன் வருவாய்…

உன்னை கரம் பிடித்து
எட்டாண்டுகள் ஆகின்றன
ஆனால் எண்பது ஆண்டுகள்
வாழ்ந்த மனத்திருப்தி எனக்கு….


நேற்று போல் இருக்கிறது
நாம் சந்தித்த நிமிடம்…


உன்னை முதலில் பார்த்த
அந்த தருணம்
இன்னும் என் நினைவில்
பசுமையாய் நிழலாடுகிறது…


எல்லோரும் என்னைப் பார்க்க
நான் மட்டும்
வாழ்க்கை முழுவதும்
என்னை கூடவே அழைத்துச் செல்லும்
உன் கரங்களைப் பார்த்தேன்…


சுற்றமும் நட்பும்
புடைசூழ நாம் இணைந்தோம்
ஆனந்தம் பொங்க
அமர்ந்திருக்கையில்
நம் இருவரின் கரத்தையும்
மூத்தோர்கள் இணைத்து வைத்தனர்
உன் பிடியில்தான் எத்தனை உறுதி!


அன்று பிடித்த கரத்தை
இன்றுவரை விடாமல் தொடர்கின்றாய்…
எத்தனை முறை புயலடித்தும்
எதுவும் செய்ய முடியவில்லை….


எழுபிறவி இருப்பது உண்மையென்றால்
இப்பிறவி மட்டுமல்ல
அனைத்திலும் நீயே
என் கரம் பற்றவேண்டும்.

புற்றுநோயை விரட்டும் இந்திய உணவுகள்

புற்றுநோய் என்பது மெல்லக் கொல்லும் ஒருநோய். எந்த வகையிலும் அது மனிதர்களை தாக்கலாம். ஆரம்பநிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை எளிதில் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சத்துநிறைந்த காய்கறிகளும் பழங்களுமே புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன.


மஞ்சளும் இஞ்சியும்


மஞ்சளும், இஞ்சியும் உணவிற்கு சுவையைக் கூட்டுபவை மட்டுமல்ல. இவற்றை சுவையுள்ள மருந்துகள் என்றே கூறலாம். இவற்றில் உள்ள வேதிப்பொருள் சோதனைக்குழாயில் உள்ள புற்றுநோய் செல்களைக்கூட விரைவாக அழித்துவிடும் ஆற்றல் உடையது. மஞ்சளும் இஞ்சியும் மாத்திரை வடிவில் கிடைக்கிறது. அவையல்லாம் சோம்பேறிகளுக்கானவை. மஞ்சளையும் இஞ்சியையும் மருந்துப்பெட்டியில் வைக்கவேண்டாம். சமையலறையில் வைத்திருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்


கிரீன் டீயின் வேதிப்பொருட்கள்


பச்சைத்தேயிலையில் EPIGALLOCATECHIN GALLATE (EGCG) மற்றும் CATECHINS ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்று நோய் செல்களின் பரம எதிரிகள். நாளொன்றுக்கு ஏறத்தாழ 1.9 லிட்டர் பச்சை தேயிலை குடிப்பதில்கூட தவறில்லை. தேயிலையை பக்குவப்படுத்தி கருப்புத்தேயிலை தயாரிக்கும்போது பயனுள்ள வேதிப்பொருளான CATECHINS ஐ இழக்கப்படுகிறது. எனவே பச்சைத்தேயிலையையே அதிகமாக குடிப்பது நலம் பயக்கும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.


புற்றுநோயை குறைக்கும் வைட்டமின் டி


மார்பக புற்றுநோய், குடல் புற்றுநோய் இவற்றை எதிர்த்து போரிடுவதில் வைட்டமின் டி பெரும்பங்காற்றுகிறது. கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆயுட்காலத்தை நீட்டிப்பதிலும் வைட்டமின் டி யின் பங்கு அளப்பரியது. முட்டைகள், புற ஊதாக்கதிர்களால் செறிவூட்டப்பட்ட காளான், சூரிய ஒளி இவற்றில் ஏராளமான வைட்டமின் டி உள்ளது. கேட்பிஷ், சல்மான் உள்ளிட்ட மீன் வகைகள் வைட்டமின் டி ஐ வாரி வழங்கக்கூடியவை.


பசுமையான காய்கறிகள், கொட்டைகள், பட்டாணி, பயறுவகைகள் இவற்றிலெல்லாம் அதிக அளவில் ஃபோலேட்டுகள் உள்ளன. பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தைச்சேர்ந்த ஃபோலிக் ஆசிட், வைட்டமின் பி 9 இவை அடங்கிய ஃபோலேட்டுகள் புற்றுநோயைத் தடுப்பதில்லை. மாறாக, ஃபோலேட்டுகள் இல்லாத உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.


பச்சை காய்கறிகள் பழங்கள்


அடர்த்தியான பச்சைநிற காய்கறிகளில் பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோயை தொடக்கநிலையிலேயே தடுத்து நிறுத்தும் தன்மையுடைய வலிமையான ஆன்டிஆன்ஸிடென்ட்ஸ் ஆகும். மேலும் இத்தகைய காய்கறிகளில் ஃபோலேட்டுகளும் அடங்கியுள்ளன. இந்த வகையான காய்கறிகளின் பசுமையான இலைகளும், சிவந்த வேர்ப்பாகமும் மிகுந்த பயனளிக்கவல்லவை.


முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு எதிரெதிர் இலைகொண்ட காய்கறிகளுக்கு புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். DINDOLYLMETHANE, SULFORAPHANE, SELENIUM ஆகிய வேதிப்பொருட்கள் இந்தவகையான காய்கறிகளில் அடங்கியுள்ளன. இவற்றை மென்று சுவைத்து சாப்பிடுவதால் கூடுதல் பலன் கிட்டும். நாம் வழக்கமாக இந்த வகை காய்கறிகளை வேகவைத்தே சாப்பிடுகிறோம். நுண்ணிய துண்டுகளாக்கி மென்று தின்பது பலனளிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.


மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் புற்றுநோயை தடுக்கும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளருவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. உச்சரிக்க இயலாத கனிகளின் பெயர்களை எண்ணி குழப்பமடையத் தேவையில்லை. அந்தந்த பருவங்களில் கிடைக்கக்கூடிய கனிகளை சீராக உண்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறும் என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள்.


கருப்பு சாக்லேட்


சாக்லேட்டில் உள்ள கோக்கோ, சர்க்கரை இவற்றின் கலவை விகிதம் குறைந்தது 70 சதவீதமாக இருக்குமாயின் சாக்லேட் உடலுக்கு நல்லது. கோக்கோவின் அளவு கூடும்போது சாக்லேட் கருமை நிறமாகவும் கசப்பானதாகவும் இருக்கும். இந்த நிலையில் சாக்லேட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் மற்றும் மருத்துவக்குணமுள்ள பாலிபினோல்ஸ் ஆகியவை செயல்படக்கூடிய நிலையில் இருக்கும். கோக்கோவில் உள்ள கேட்சின்ஸ் என்னும் வேதிப்பொருள் தேயிலையிலும் காணப்படுகிறது. தென் அமெரிக்கர்களின் உணவுப்பழக்கத்தை ஆராய்ந்தபின் இதய நோய்கள், மாரடைப்பு, புற்றுநோய் இவற்றையெல்லாம் கேட்சின்ஸ் வேதிப்பொருளால் தடுத்து நிறுத்தப்படுவதாக வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.


சிவப்பு ஒயின்


சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் RESVERATROL என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள். இந்த பத்துவகையான உணவுப்பொருட்களையும் கலந்து கொழுப்பு இல்லாத யோகார்ட்டுடன் கலந்து சாப்பிடுவது நாவிற்கு மட்டும் ருசியானது அல்ல. நோயற்ற வாழ்விற்கும் சுவை கூட்டவல்லது என்பது வல்லுநர்களின் கருத்து.


புற்றுநோயின் தொடக்கமே உடம்பில் உள்ள டி என் ஏ எனப்படும் மரபணுக்கள் சேதமடைவதுதான். பருப்பு வகைகளும் கொட்டைகளும் ஏராளமான நார்ச்சத்தை பெற்றுள்ளன. குடலில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுப்பதில் நார்ச்சத்து பெரும் பங்கு வகிக்கின்றது. மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் தின்று தீர்க்கும் மேல் நாட்டவர்கள் நார்ச்சத்துள்ள பருப்பு வகைகளையும் கொட்டைகளையும் சுவையாக சமைப்பது எப்படி என்பதை இந்தியர்களின் சமையலறைகளில் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும்.

முதுமையை துரத்தும் தண்ணீர்!

நம் உயிர்வாழத் தேவையான பொருட்களில் தண்ணீரின் பங்கு முக்கியமானது. உடலில் உள்ள தசைகள், தோல், முதலியவற்றின் வளர்ச்சியில் 70 சதவிகிதம் தண்ணீரின் பங்காகும். உடலில் நீர் சத்து குறைந்தால் தோல் வறண்டு போவதோடு உடல் சோர்வடைந்து விடுகிறது. இதனால் அகத்தோற்றம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.


வயதாவதை முதலில் உணர்த்துவது தோல்தான். முகத்தில் சிறிது சுருக்கம் விழுந்தாலும் கவலை கொள்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். சருமத்தை பாதுகாப்பதற்காக எத்தனையோ கிரீம்களை உபயோகிக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். பளபளப்பாகவும், மிக அழகான தோல் வேண்டும் என்பதற்காகவும், அதனை பாதுகாக்கவும் என்னென்னவோ முயற்சி செய்கின்றனர்.


முகப் பளபளப்பு


அதிக தண்ணீர் குடித்தால் தோல் சுருக்கம் காணாமல் போய்விடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தண்ணீர் குடிப்பதன் மூலம் தோலுக்குத் தேவையான ஈரப்பதம் கிடைக்கிறது. இதன் மூலம் இளமையான தோற்றம் ஏற்படுகிறதாம்.


இந்த ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்களை எட்டு வாரங்களுக்கு தினமும் தொடர்ந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்கச் செய்துள்ளனர். இதில் ஒரு பிரிவு பெண்கள் குழாய் நீரையும், மற்றொரு பிரிவினர் வில்லோ நீரையும் குடித்துள்ளனர்.


வில்லோ நீர் என்பது இங்கிலாந்தில் அமைந்திருக்கும் லேக் மாவட்டத்தில் இயற்கையாக கிடைக்கும் தண்ணீராகும். இந்த தண்ணீரில் இருக்கும் சாலிசின் செரித்த பிறகு சாலிசிலிக் ஆசிடாக மாறுகிறது. பெரும்பாலான சரும பராமரிப்பு கிரீம்களில் சாலிசிலிக் ஆசிடைத்தான் பயன்படுத்துகின்றனர்.


திரும்பிய இளமை


செயற்கையான சரும கிரீம்களில் பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிடை தண்ணீர் குடித்து இயற்கையாக நாம் பெறுவதால்தான் தோல் சுருக்கம் மறைந்து போகிறது.


இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களை ஆராய்ச்சிக்கு முன்னரும், பின்னரும் புகைப்படம் எடுத்துள்ளனர். இதில் ஆய்விற்கு பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பெண்கள் இளமையாக தோன்றியுள்ளனர்.


சாதாரண தண்ணீர் குடித்தவர்களுக்கு தோல் சுருக்கம் 19 சதவிகிதமும், வில்லோ தண்ணீர் குடித்தவர்களுக்கு 24 சதவிகிதமும் சுருக்கம் மறைந்திருந்ததாம்.


தண்ணீரின் அவசியம்


உஷ்ணபிரதேசங்களில் தண்ணீரின் தேவை முக்கியமானது. தேவையான அளவிற்கு தண்ணீர் அருந்தாததன் காரணமாக அவர்கள் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சினைக்கும் ஆளாகின்றனர். எனவே உடல் நலத்திற்கு சராசரியாக மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீரை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோயாளிகள் 4 முதல் 5 லிட்டர் தண்ணீரும், தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 5 முதல் 6 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் பரிந்துரைக்கின்றனர்.


நான்கு லிட்டர் தண்ணீர்


நான்கு லிட்டர் தண்ணீரையும் ஒரே நேரத்தில் அருந்தக்கூடாது என்று கூறும் மருத்துவர்கள் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையே ஒரு லிட்டரும் குடிக்கவேண்டுமாம். மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்,


சாதாரண உடல் நிலை கொண்டவர்கள் குளிர்ந்த நீர் அருந்துவது வயிற்றுக்கு நல்லது. ஒரு சிலர் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவார்கள். எப்போதாவது சுடுநீர் தண்ணீர் அருந்துவது தவறில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாலு டம்ளர் தண்ணீர் நோய்களை விரட்டும்!

மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீர் செல்களுக்கு ஆக்ஸிஜனை கடத்தும் ஆக்ஸிகரனியாக செயல்படுகிறது. நுரையீரலுக்கு சுத்தமான காற்றை அனுப்ப உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக தக்கவைக்கிறது. மூட்டுக்களின் வழவழப்புத்தன்மையை பாதுகாக்கிறது.


தலை முதல் கால் வரை ஒவ்வொரு செல்லும் தண்ணீரின் தேவையை உணர்ந்துள்ளன. மனித மூளையின் செயல்பாட்டிற்கு 90 சதவிகிதம் தண்ணீர் தேவையுள்ளது. எனவே உடலில் நீர்ச்சத்து குறைய குறைய மூளையின் செயல்பாடு குறையும். இதனையடுத்து தலைவலி உள்ளிட்ட நோய்கள் ஒவ்வொன்றாக வர ஆரம்பிக்கும். எனவே தண்ணீரை நாம் நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுத்தலாம்.


கலையில் கண்விழித்ததும் பல் துலக்கும் முன்பே 4 டம்ளர் தண்ணீர் அருந்தவேண்டும். பின்னர் பல் துலக்கி வாய் சுத்தம் செய்த பின்னர் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவுமே உட்கொள்ளக் கூடாது. 45 நிமிடங்களுக்குப் பின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.


தண்ணீர் மருத்துவம்


எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்:


உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள், வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள் சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள், மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள், புற்றுநோய் - 180 நாட்கள், காச நோய் - 90 நாட்கள். ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். இந்த வழியில் பின்பற்றினால் அனைத்துநோய்களும் முற்றிலும் குணமாகும் அல்லது நோயானது மேலும் கடுமையாகாமல் கட்டுப்படும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


பக்கவிளைவு கிடையாது


பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும். நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்.


முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம். மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழலாம்.


தண்ணீர் குடித்தால் மட்டுமே 'பக்க விளைவு' வராது -மாறாக 'தண்ணி' அடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு 'பக்கா'வான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே நிறைய தண்ணீர் குடிங்க, அந்தத் 'தண்ணி'யை மறந்துடுங்க...!

உணவுக்குப்பின் சூடா குடிங்க... புற்றுநோய் வராது! – மருத்துவர்கள் அறிவுரை

உணவு உண்ட உடன் தண்ணீர் குடிப்பது குறித்து பல வித கருத்துக்கள் நிலவுகின்றன. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றனவாம் எனவே உணவு உண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.


டயட்டினை பின்பற்றுபவர்கள் சிறிதளவு உணவு உண்ணவேண்டும் என்பதற்காக அதிகமான தண்ணீரை அருந்துகின்றனர். மொத்தத்தில் தண்ணீரானது உடல் நலம் காக்கும் உன்னத மருந்தாகும்.


இளம் சூடான வெந்நீர்


உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புற்றுநோய் செல்கள் ஏற்படுவதையும் தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.


இதன் மூலம் உணவானது எளிதில் செரிமானமாவதோடு கெட்டக் கொழுப்புக்கள் ஆங்காங்ககே சேர்ந்து உடலுக்கு கெடுதல் ஏற்படுவது தடுக்கப்படும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே தான் உணவு உண்டபின்னர் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கவும் பரிந்துரைக்கின்றனர்.


குளுமையான நீர் கூடாது


அதேசமயம் ஜில் நீர் இதற்கு எதிர்மறையான செயல்பாட்டினை ஏற்படுத்துமாம். அநேகம் பேர் உணவு உண்டவுடன் ப்ரிட்ஜில் வைத்த குளிர் நீர் பருகுவார்கள். இது இதயநோய், கேன்சர் போன்றவற்றிர்க்கு வழி வகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், உண்ட உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது.


நோய்களுக்கு காரணம்


இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே வெது வெதுப்பான தண்ணீரே உடல் நலத்திற்கு ஏற்றது என்கின்றனர் மருத்துவர்கள்.