Sunday, 4 December 2011

சதுரகிரி மலைப் பயணம் - 3



 இடைப்பட்ட சுமார் ஒன்றரை கிமீ தூரம் மட்டுமே சற்றே கடினம். மற்றவை எளிதில் ஏறிவிடலாம். இன்னும் கால்மணிநேரம் நடந்தால் வருவது குளிராட்டி சோலை எனப்படும் மரங்கள் அடர்ந்த சோலைவனப்பகுதி. இது வரை ஏறிவந்ததில் இருந்த களைப்பு தானாக தீரும் வண்ணம் இதமான குளிர் உடலையும் மனதையும் வருடும். சற்றே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

குளிராட்டி சோலை


 இன்னும் மேலே ஏற இந்த இரண்டாம் மலைப்பகுதி முடிந்ததற்கு அறிகுறியாக சமவெளிப்பகுதி வருகிறது. இந்த இடத்தில் சின்ன பசுக்கிடை என்கிற அறிவிப்பு இருந்தது. இது சமவெளிப்பகுதி ஆகும்.  சில பசுக்கள் கழுத்தில் சத்தம் கேட்கும் மணிகளுடன் மேய்ந்து கொண்டிருந்தன. இன்னும் மேலே ஏற ஏற எதிர்படுவது நாவல் ஊற்று. பலவித சத்துகள் நிறைந்ததாக நாவல் மரத்தடியில் அமைந்த இந்த ஊற்று சர்க்கரை வியாதிக்கு சிறந்த நிவாரணி என்கிறார்கள். இது நிலத்தில் அடியில் இருந்து பொங்கி வந்து கொண்டே இருக்கிறது.....

 
நாவல் ஊற்று
மலையேறும்போது சில விசயங்களை தெளிவு செய்து கொள்ளுங்கள். நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களின் வயது மற்றும் உடல்நலத்திற்கேற்ப பொருத்தமான நடை வேகத்தையும், ஓய்வெடுக்கும் நேரத்தையும் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளுங்கள். மற்றவர்களோடு எந்தக்காரணம் கொண்டும் போட்டி போட்டு ஏற வேண்டாம். வழியில் கொண்டுபோன உணவை மிகக்குறைவாக உண்ணுவது களைப்பு இல்லாமல் ஏற வசதியாக இருக்கும்.



எதிரே வருபவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் ஏற வேண்டும் என்ற கேள்வியைக்கேட்காதீர்கள். பெரும்பான்மையாக உங்களுக்கு ஆதரவாக ’கொஞ்சதூரம்தான்’ என்ற பொய்யான பதிலே வரும். இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் உங்கள் மனதைத்தான். உடல் ஒத்துழைப்பு கொடுத்தால் கூட உங்கள் மனம் இன்னும் எவ்வளவு தூரம்தான் போகணுமோ தெரியலையே, எனப் புலம்பி நம்மை பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். :))

உங்கள் கண்ணுக்கெட்டிய தூரம்தான் இலக்கு என வைத்துக்கொண்டு நடந்தால்போதும். அதிகபட்சம் நம் பார்வைக்கு 100 அல்லது 150 அடிதான் தெரியும். அதற்குள் வளைவோ மேடோ வந்துவிடும். திரும்ப அடுத்த இலக்கு இது கூட சரியான முறை அல்ல:)) மனதை ஏமாற்றத்தான்...

இன்று ரொக்கம் நாளை கடன் என்பதுபோல இந்த ஒரு அடியை சரியாக கவனமாக அடி பிரளாமல் எடுத்துவைத்தால் போதும் என நினைத்துக் கொள்ளுங்கள் பயணம் அற்புதமாக இருக்கும். அலுப்பு,சலிப்பு ஏதுமின்றி மூன்று மணிநேரத்தில் சாதரணமாக ஏறிவிடலாம். {நிகழ்காலத்தில இருங்க எதிர்காலத்தைப்பத்தி கவலைப்படாதீங்க அப்படிங்கற தொனி தெரிஞ்சா நாந்தான் பொறுப்பு:)))))}
 அடுத்த 10 நிமிட நடைதூரத்தில் பாதையின் இடதுபுறம் ஒரு சிறிய ஒத்தையடிப்பாதை வந்து இணைந்து கொள்கிறது. இது தேனி, கம்பம் வழியாக வருபவர்களுக்கான வழி. ஆனால் இதில் அடிக்கடி நன்கு வந்து பழகியவர்களே போய்வரமுடியும். புதியவர்கள் தனியாக போவது உகந்ததல்ல என்றார்கள்.
ஆனாலும் நமக்கு நம் பாதையின் ஒரு அடையாளமாக இந்த இடம் இருந்தது. அடுத்த பதினைந்து நிமிட நடை தூரத்தில் நாம் கடப்பது பச்சரிசிப்பாறை பகுதி., இங்கு மலையின் மண் முழுவதும் சற்று பருமனான மணல்துகள்களாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் உடைத்த பச்சரிசிபோல் இருந்தது:) இதுதான் என் அறிவுக்கு (???!!!) எட்டியது. பெயர்க்காரணம் வேறாக இருக்கலாம்:)))))
பச்சரிசிப்பாறை
மேலே இந்தப்பகுதியின் ஒரு பகுதி தோற்றம்,  பச்சரிசிப்பாறை முடிவடையும் இடம் கீழே....

இந்த ஒரு இடம்தான் இப்படி கரடுமுரடாக காட்சியளிக்கும்.  அடுத்த கால் மணிநேர தூரம் வந்ததும் நாம் அடையும் இடம் (குளிராட்டி சோலை எனும் இதமான இடத்தை தாண்டினோம் அல்லவா, அதைப்போல் சற்று சிறியதான வனப்பகுதிதான்) சோலைவனதுர்க்கை எனும் ஆற்றோரப்பேச்சி அம்மன் குடி கொண்டிருக்கும் இடம். தேவையானால் இந்த இடத்தில் நீங்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

சோலைவனதுர்க்கை
சோலைவனதுர்க்கை

தொடர்ந்த அரைமணிநேரப்பயணத்தில் நீங்கள் சதுரகிரி மலைப்பயணத்தில் முக்கால்வாசிக்கும் மேலாக வந்துவிட்டீர்கள். அந்த இடம்தான் சதுரகிரி நுழைவாயிலாக கருதப்படும் பிலாவடிக்கருப்பர் சந்நதி...
பலாமரத்தடியில் அமர்ந்து இருக்கும் பிலாவடிக்கருப்பர் என்கிற சதுரகிரி காவல் தெய்வத்தின் கோவிலின் பின்புறம் தைலக்கிணறு  இருப்பதாக சித்தர்களின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.





சுயம்புநாதராகிய சுந்தரமகாலிங்கர்


 



சந்தன மகாலிங்கர்








அன்புடன்  நன்றி
http://arivhedeivam.blogspot.com
http://ganeshnlk.blogspot.com
http://eternalexpression.wordpress.com/2011/09/22/sathuragiri-yatra-a-divine-experience/








சதுரகிரி மலைப் பயணம் - 2

ஒருமுறை சதுரகிரிமலை ஏற சாதாரணமாக நமக்கு 5 மணி நேரம்  ஆகும். இந்த சுமைதூக்கும் பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதரணமாக ஏறிஇறங்குகின்றனர்.  சீசன் சமயங்களில் மூன்று முறை கூட ஏறுவார்களாம். முதல் மலை அதிக ஏற்றஇறக்கம் இன்றி சிரமம் இன்றி இருந்தது.  இன்னும் செல்லச் செல்ல  வழியில் தென்பட்டது குதிரை ஊத்து....கூர்ந்து கவனித்தால் இரண்டு பாறைகளுக்கு இடையே கனமான வேர் ஒன்றை கட்டி வைத்து இருக்கிறார்கள். அதைப் பிடித்துக்கொண்டே போகலாம்...

அதைக்கடந்து இன்னும் மேலே செல்லச் செல்ல வழுக்குப்பாறை என அழைக்கப்படும் படிவெட்டிப்பாறை இருந்தது. படி வெட்டாததற்கு முன் வழுக்கியதால் இந்தப்பெயர் வந்திருக்கலாம். படிகள் மிகச் சிறியதாக இருந்தாலும் பயமின்றி நடக்கலாம். இதே போன்ற இன்னும் அதிகம் படிகொண்ட பாறை ஒன்று மேலே செல்லம்போது இருந்தது:))


அந்தப் பாறையிலிருந்து மறுபுறம் கீழே தேங்கி இருக்கும் நீர்....நன்றாக ஓடி ஆடி  குளிக்கலாம். ஆனால் கொஞ்சம் சிரமப்பட்டுதான் இறங்க வேண்டும். ஆழம் அதிகம் இல்லை.





அதே பாறை மேலிருந்து கீழ் நோக்கிய பார்வையில்................

 இந்தப்பாறையைத்தாண்டி அடுத்த கால் மணிநேர நடைதூரத்தில் முதல் மலை முடிவுற்று இரண்டாவது மலை ஆரம்பம். இந்த இடத்தை சிறு நீரோடை பாய்ந்து வருகிறது.  வெள்ளம் வரும் காலங்களில் இந்த இடத்தை தாண்ட முடியாதாம். காரணம் சற்றுமுன் பின்னாக எப்படிச் சென்றாலும் சமதளமாக அல்லது ஏறவே முடியாத இடமாக இருப்பதே காரணம்.

நாம் செல்லுகின்ற இடத்தில் ஒரு பெரிய பாறையில் கனமான சங்கிலி ஒன்றைக் கட்டிவைத்திருக்கிறார்கள். அதைப்பிடித்துக்கொண்டு ஏறுவது வழுக்காமல் செல்லவும், சற்று அதிகமாக தண்ணீர் வந்தாலும்  தாண்டிச் செல்லமுடியும்.
 இந்தப்பாறை சற்று நெட்டுக்குத்தலாக மேலேறும். இதிலும் படி வெட்டி வைத்திருக்கிறார்கள். அதன் தூரத்துப்பார்வை கீழே..


கூடவே அந்தப்பாறைமீது மேலேறிச் சென்ற பின் அங்கிருந்த கீழ்நோக்கிய பார்வையில்.....

 சதுரகிரி மலைப்பாதையில்  மலைமீது நாம் சென்று சேரும் வரை இடதுபுறமாக  மலைகளின் இடைவெளிகளில் ஓடிவரும் நீரோட்டம் நம் கண்களில் காட்சியளித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதாவது மலைப்பாதை பெரும்பாலும்  அருவியின் பாதையை ஒட்டியே அமைந்திருக்கிறது.

இந்த அருவியின் இடதுபுறம் அமைந்துள்ள மலை நல்ல உயரம். அதோடு பார்வைக்கு ஒரே பாறையால் ஆன மிகப்பெரிய நந்திபோல படுத்துக்கிடக்கிறது.:)
இந்த மலையைத்தாண்டி, அதாவது கிளம்பியதிலிருந்து சுமார் ஒண்ணேமுக்கால் மணிநேரம் கடந்து அடைந்தது இரட்டைலிங்கம் கோவில். இங்கே வந்தடைந்தால் சுமார் பாதிதூரம் வந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம்.

கோணத்தலவாசல் என்பது சற்றே கடினமான ஏற்றத்தின் ஆரம்பம். Z வடிவமே பெயர்க்காரணமாக இருக்கும்போல..:)).  காரம்பசுத்தடம் என்பது பாறையின்மீது சந்தனமும், மஞ்சளும் கலந்து பூசி வழிபட்டு இருக்கிறார்கள். தலபுராணத்தோடு சம்பந்தப்பட்ட இடம். பாறையில் பசுவைக்கட்டி வைக்கும் வளையமும்  இருந்தது.  அதைத்தாண்டி கால் மணிநேர பயணத்தில் கோரக்கர் குகை.
காரம்பசுத்தடம்
  
கோரக்கர் குகை முன்புறம் அர்ஜீனா நதி அமைதியாக ஓடும் அழகு, கோடை என்பதால் நீர் குறைவு..
கோரக்கர் குகை


சிவபெருமானின் மூன்றாவது கண் - பதஞ்சலி குகை

பதஞ்சலி குகை வாயில்

இரட்டைலிங்கம்
இரட்டைலிங்கம் கோவில்

இரட்டை லிங்கம். இந்த இடத்தை நீங்கள் அடைந்துவிட்டால் மலையின் பாதி தூரத்தை கடந்துவிட்டீர்கள் என அர்த்தம்.

தொடரும்

அன்புடன்  நன்றி
http://arivhedeivam.blogspot.com
http://ganeshnlk.blogspot.com
http://eternalexpression.wordpress.com/2011/09/22/sathuragiri-yatra-a-divine-experience/


சதுரகிரி மலைப் பயணம் - 1

சதுரகிரி மலைப் பயணம்


Vinayagar temple on the foothills of Sathuragiri



தாணிப்பாறை

 தாணிப்பாறை .... சந்தனமகாலிங்கத்துக்கு அரோகரா, சுந்தரமகாலிங்கத்திற்கு அரோகரா

 

தாணிப்பாறை
கருப்பண்ணசுவாமி கோவில்


கருப்பண்ணசுவாமி கோவில்

 
கருப்பண்ணசுவாமி கோவில்....
இது நேர்த்திக்கடனாக வேண்டியவர்கள் அனைவரும் கிடாய் வெட்டி சாமி கும்பிடும் இடமாகும். அங்கேயே கிடாய், கோழி என சமைத்து சாப்பிட இடம் இருக்க மக்களுக்கு கொண்டாட்டம்தான். இன்னும் சற்று தூரம் சென்றால் சிறு அருவி ஒன்று இருப்பது இன்னும் வசதி. :))

ஆக தாணிப்பாறை என்கிற மலை அடிவாரம் கிராமத்தில் உள்ள சிறுதெய்வ வழிபாடு நடக்கும் இடமாக இருந்தது. எனக்கு அந்த இடம் சற்று பொருந்தா உணர்வைத் தோற்றுவிக்க புகைப்படம் எடுப்பதையும் தவிர்த்து தாண்டிச் சென்றேன். தொடர்ந்து நடக்க சுமார் அரை கிமீ தூரத்தில் இடதுபுறம் அருவி.



தொடரும்

அன்புடன்  நன்றி
http://arivhedeivam.blogspot.com
http://ganeshnlk.blogspot.com
http://eternalexpression.wordpress.com/2011/09/22/sathuragiri-yatra-a-divine-experience/

சதுரகிரி மலை - 1

சித்தர்பெருமக்கள் மனிதர்களின் கால்படாத, இயற்கை செல்வங்கள் நிறைந்த மலைப்பகுதிகளில் தங்கி மனிதகுலத்திற்கு தங்களின் பங்களிப்பை செயல்படுத்திய வரலாற்று நிகழ்வுகள் பல செவி வழியாகவும், பாடல்கள் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் இவைகளுக்கு சான்று இருக்கிறதா என்கிற தர்கக அறிவு யோசிக்கத்தான் செய்கிறது.

அவர்கள் கண்டுபிடித்த பல்வேறுவகையான மூலிகைகள், அவைகளின் பயன்கள் எல்லாம் உண்மைத்தன்மை வாய்ந்ததா என்றால் என்னளவில் சரியானவையே.

சுஜாதா தனது கேள்வி பதில் ஒன்றில் சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டது எதிரி நாட்டவர் சீன எல்லைக்குள் வரக்கூடாது என்பதற்குத்தான். ஆனால் அவர்களுக்கு  எதிர்காலத்தில் வான் வழியாக பறந்து எளிதாக எதிரிகள் தாக்கலாம் என்கிற அளவில் விஞ்ஞானம் வளரும் என நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. தற்போது அந்த பெருஞ்சுவர் காட்சிப்பொருளாகவும், உலக அதிசயமாகவும் மட்டுமே விளங்குகிறது. ஆக கட்டப்பட்ட நோக்கம் வேறு, அது பயன்படுகின்ற நோக்கம் வேறாக இருக்கிறது.

அதுபோல் தற்போதய பொதுநலம் கருதாத சுயநலம் மிகுந்தஅரசியலில், பணம் என்பது பண்டமாற்றத்தின் அடையாளம் என்பது போய், எதற்கு என தெரியாமல் கோடி,கோடியாய்ச் சேர்த்து வைத்து வாழும் தற்காலத்துக்கு சித்தர்கள் தந்த மூலிகைத் தகவல்கள் தேவையானதாக இருக்கிறதா என்பது ஆய்வுக்கு உரியதே.

சித்தர் பெருமக்கள் வாழ்ந்த காலத்தில் உண்ண  உணவு, இருக்க இடம், உடுக்க உடை இவை மட்டுமே அத்தியாவசியமாக இருந்தது. மனம் மாசுபடாமல் இருந்த வெள்ளந்தியான மக்கள் வாழ்ந்த காலத்தில் கல்வி, கேள்வி, கலைகள் வள்ர்ச்சி அடைந்த காலகட்டத்தில், அவர்களின் உள்தேடுதல் அதிகமாகி, இறை சக்தியை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்படி அவர்கள் உணரும் விதத்திற்கு தடையாக எதுவும் இருக்கக்கூடாது என்கிற கருணை உள்ளத்தோடு, அன்போடு, தான் பெற்றதை இவ்வையகம் பெறவேண்டும் என்கிற பெருநோக்கோடு, கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற வகையிலும் தான் உணர்ந்ததை, அனுபவித்ததை பாடல்களாக நமக்கு தந்து சென்றனர்.

ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொருவிதம். எனவே இறைஉணர்வு பெற பலவேறு வழிமுறைகள் தேவை என்பதை உணர்ந்து அந்த வழிமுறைகளை தான் கண்டவாறு, அனுபவித்து உணர்ந்தவாறு பலரும் சொல்லி இருக்கின்றனர். 

அந்த வழிமுறைகள் தற்காலத்தில் தேவையா என்றால் அவைகள் அமுதமாக இருக்கலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் தகுதிவாய்ந்த பாத்திரமாக நாம் இருக்கிறோமா எனபதே என்னுள் எழும் கேள்வி.

சித்தர்கள் சொல்லியவை எல்லாம் தகுதியானவரை தரம் உயர்த்துவது, எவரையும் தகுதிப்படுத்தவும் வல்ல படிப்படியான வழிமுறைகள் தாம். இதற்கு நாம் காலிப்பாத்திரமாய் இருக்கவேண்டும். மிகுந்த கணக்கீடுகளோடு சித்தர் பெருமக்களை அணுகும்போது நமக்குக் கிடைப்பது ஏமாற்றமே.

சித்தர்களின் மூலிகைக்குறிப்புகள் உண்மைகள் விரவி இருந்தபோதும்,  அவற்றின்  தேவை இப்போது அவசியம் இல்லை என்பதே என் எண்ணம். வெறுமனே உடல்நலம் என்றால் சரிதான். இறைஉணர்வு பெறவேண்டும் என்ற நோக்கில் மனதையும் உடலையும் செம்மைப்படுத்தவென உள்ள மூலிகைகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான வாழ்க்கை முறையோ, மனநிலையோ நம்மிடம் தற்சமயம் இல்லை எனப் பொதுவாகச் சொல்லலாம்.

சதுரகிரியில் இருக்கும் மூலிகைகளில் சில

கல்தாமரை என்ற மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.இந்த கல்தாமரையின் கிழங்கு அதன் வேர்களில் இருக்கும்.ஒவ்வொரு கிழங்கும் பூசணிக்காய் அளவுக்குப் பெரியதாக இருக்கும்.இந்த கிழங்கை அந்தக் காலத்தில் சித்தர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இந்தக் கிழங்கின் மேல் நின்று வானத்தைப் பார்த்தால் அதுவும் பகலில் பார்த்தால் நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள் கண்ணுக்குத் தெரியும்.இந்தக் கிழங்கைப் பயன்படுத்தித்தான் கிரக சஞ்சாரத்தை சித்தர்கள் கண்டறிந்தனர்.

இதுதவிர,மனித உடலை வெட்டினால் அந்த வெட்டுப்பட்ட உறுப்பை ஒட்ட வைக்கும் மூலிகை சதுரகிரியில் இருக்கிறது.நமது நினைவுகளை மறக்கடிக்கும் மூலிகையும் இங்கே இருக்கிறது.

இறவாத நிலையைத் தரும் மூலிகையும் சதுரகிரியில் இருக்கிறது.சதுரகிரியின் மொத்த மலைப்பரப்பைப் பற்றியும் போகர் 7000 என்ற புத்தகத்தில் பாடல்களாக துல்லியமாக விவரித்துள்ளார்.

உதாரணமாக, அத்தி ஊற்றிலிருந்து கூப்பிடுதூரத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆசிரமம் இருக்கிறது.சின்னப் பசுக்கடையிலிருந்து அம்பெய்யும் தூரத்தில் சித்தர்களின் குளிக்கும் அருவி இருக்கிறது.இப்படி மொத்த சதுரகிரியையும் பாடல்களாகவே எது எவ்வளவு தூரம் என்பதை வரைபடமாக விவரித்துள்ளார் போகமகரிஷி!!!!








 
 



தொடரும்

அன்புடன்  நன்றி
http://arivhedeivam.blogspot.com
http://ganeshnlk.blogspot.com
http://eternalexpression.wordpress.com/2011/09/22/sathuragiri-yatra-a-divine-experience/
தினமலர் நாளிதழ்