Sunday 4 December 2011

சதுரகிரி மலைப் பயணம் - 3



 இடைப்பட்ட சுமார் ஒன்றரை கிமீ தூரம் மட்டுமே சற்றே கடினம். மற்றவை எளிதில் ஏறிவிடலாம். இன்னும் கால்மணிநேரம் நடந்தால் வருவது குளிராட்டி சோலை எனப்படும் மரங்கள் அடர்ந்த சோலைவனப்பகுதி. இது வரை ஏறிவந்ததில் இருந்த களைப்பு தானாக தீரும் வண்ணம் இதமான குளிர் உடலையும் மனதையும் வருடும். சற்றே அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்.

குளிராட்டி சோலை


 இன்னும் மேலே ஏற இந்த இரண்டாம் மலைப்பகுதி முடிந்ததற்கு அறிகுறியாக சமவெளிப்பகுதி வருகிறது. இந்த இடத்தில் சின்ன பசுக்கிடை என்கிற அறிவிப்பு இருந்தது. இது சமவெளிப்பகுதி ஆகும்.  சில பசுக்கள் கழுத்தில் சத்தம் கேட்கும் மணிகளுடன் மேய்ந்து கொண்டிருந்தன. இன்னும் மேலே ஏற ஏற எதிர்படுவது நாவல் ஊற்று. பலவித சத்துகள் நிறைந்ததாக நாவல் மரத்தடியில் அமைந்த இந்த ஊற்று சர்க்கரை வியாதிக்கு சிறந்த நிவாரணி என்கிறார்கள். இது நிலத்தில் அடியில் இருந்து பொங்கி வந்து கொண்டே இருக்கிறது.....

 
நாவல் ஊற்று
மலையேறும்போது சில விசயங்களை தெளிவு செய்து கொள்ளுங்கள். நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களின் வயது மற்றும் உடல்நலத்திற்கேற்ப பொருத்தமான நடை வேகத்தையும், ஓய்வெடுக்கும் நேரத்தையும் அவ்வப்போது முடிவு செய்து கொள்ளுங்கள். மற்றவர்களோடு எந்தக்காரணம் கொண்டும் போட்டி போட்டு ஏற வேண்டாம். வழியில் கொண்டுபோன உணவை மிகக்குறைவாக உண்ணுவது களைப்பு இல்லாமல் ஏற வசதியாக இருக்கும்.



எதிரே வருபவரிடம் இன்னும் எவ்வளவு தூரம் ஏற வேண்டும் என்ற கேள்வியைக்கேட்காதீர்கள். பெரும்பான்மையாக உங்களுக்கு ஆதரவாக ’கொஞ்சதூரம்தான்’ என்ற பொய்யான பதிலே வரும். இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் உங்கள் மனதைத்தான். உடல் ஒத்துழைப்பு கொடுத்தால் கூட உங்கள் மனம் இன்னும் எவ்வளவு தூரம்தான் போகணுமோ தெரியலையே, எனப் புலம்பி நம்மை பாடாய்ப்படுத்தி எடுத்துவிடும். :))

உங்கள் கண்ணுக்கெட்டிய தூரம்தான் இலக்கு என வைத்துக்கொண்டு நடந்தால்போதும். அதிகபட்சம் நம் பார்வைக்கு 100 அல்லது 150 அடிதான் தெரியும். அதற்குள் வளைவோ மேடோ வந்துவிடும். திரும்ப அடுத்த இலக்கு இது கூட சரியான முறை அல்ல:)) மனதை ஏமாற்றத்தான்...

இன்று ரொக்கம் நாளை கடன் என்பதுபோல இந்த ஒரு அடியை சரியாக கவனமாக அடி பிரளாமல் எடுத்துவைத்தால் போதும் என நினைத்துக் கொள்ளுங்கள் பயணம் அற்புதமாக இருக்கும். அலுப்பு,சலிப்பு ஏதுமின்றி மூன்று மணிநேரத்தில் சாதரணமாக ஏறிவிடலாம். {நிகழ்காலத்தில இருங்க எதிர்காலத்தைப்பத்தி கவலைப்படாதீங்க அப்படிங்கற தொனி தெரிஞ்சா நாந்தான் பொறுப்பு:)))))}
 அடுத்த 10 நிமிட நடைதூரத்தில் பாதையின் இடதுபுறம் ஒரு சிறிய ஒத்தையடிப்பாதை வந்து இணைந்து கொள்கிறது. இது தேனி, கம்பம் வழியாக வருபவர்களுக்கான வழி. ஆனால் இதில் அடிக்கடி நன்கு வந்து பழகியவர்களே போய்வரமுடியும். புதியவர்கள் தனியாக போவது உகந்ததல்ல என்றார்கள்.
ஆனாலும் நமக்கு நம் பாதையின் ஒரு அடையாளமாக இந்த இடம் இருந்தது. அடுத்த பதினைந்து நிமிட நடை தூரத்தில் நாம் கடப்பது பச்சரிசிப்பாறை பகுதி., இங்கு மலையின் மண் முழுவதும் சற்று பருமனான மணல்துகள்களாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் உடைத்த பச்சரிசிபோல் இருந்தது:) இதுதான் என் அறிவுக்கு (???!!!) எட்டியது. பெயர்க்காரணம் வேறாக இருக்கலாம்:)))))
பச்சரிசிப்பாறை
மேலே இந்தப்பகுதியின் ஒரு பகுதி தோற்றம்,  பச்சரிசிப்பாறை முடிவடையும் இடம் கீழே....

இந்த ஒரு இடம்தான் இப்படி கரடுமுரடாக காட்சியளிக்கும்.  அடுத்த கால் மணிநேர தூரம் வந்ததும் நாம் அடையும் இடம் (குளிராட்டி சோலை எனும் இதமான இடத்தை தாண்டினோம் அல்லவா, அதைப்போல் சற்று சிறியதான வனப்பகுதிதான்) சோலைவனதுர்க்கை எனும் ஆற்றோரப்பேச்சி அம்மன் குடி கொண்டிருக்கும் இடம். தேவையானால் இந்த இடத்தில் நீங்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

சோலைவனதுர்க்கை
சோலைவனதுர்க்கை

தொடர்ந்த அரைமணிநேரப்பயணத்தில் நீங்கள் சதுரகிரி மலைப்பயணத்தில் முக்கால்வாசிக்கும் மேலாக வந்துவிட்டீர்கள். அந்த இடம்தான் சதுரகிரி நுழைவாயிலாக கருதப்படும் பிலாவடிக்கருப்பர் சந்நதி...
பலாமரத்தடியில் அமர்ந்து இருக்கும் பிலாவடிக்கருப்பர் என்கிற சதுரகிரி காவல் தெய்வத்தின் கோவிலின் பின்புறம் தைலக்கிணறு  இருப்பதாக சித்தர்களின் குறிப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.





சுயம்புநாதராகிய சுந்தரமகாலிங்கர்


 



சந்தன மகாலிங்கர்








அன்புடன்  நன்றி
http://arivhedeivam.blogspot.com
http://ganeshnlk.blogspot.com
http://eternalexpression.wordpress.com/2011/09/22/sathuragiri-yatra-a-divine-experience/








No comments:

Post a Comment