Sunday, 4 December 2011

சதுரகிரி மலைப் பயணம் - 4

44சதுரகிரி மலையேற்றம் என்பதே பொதுவாக சுந்தரமகாலிங்கர், சந்தன மகாலிங்கர் இருவரையும் தரிசனம் செய்வதே ஆகும்.  சித்தர்கள் தரிசனம் வேண்டியும், அபூர்வ மூலிகைகளை தேடியும் இங்கு வருபவர்கள் இதில் சேர்த்தி இல்லை:) பெரும்பாலானோர் இவ்விரு சந்நதியுடன் தன் பயணத்தை நிறைவு செய்து அங்கு மடங்களில் இரவு தங்கியோ அல்லது உடனேயோ அடிவாரம் திரும்புகின்றனர்.

அதற்கு மேலாக தவசிப்பாறை, பெரிய மகாலிங்கம் என பயணத்தை நீட்டிப்பவர்களும் உண்டு. இதற்கு ஒத்தையடிப்பாதை மட்டுமே இருக்கிறது. அதுவும் ஏற்கனவே சென்று வந்த அன்பர்கள் துணையுடனோ அல்லது அங்கு இருக்கும் வழிகாட்டி(?)களுடனோ மட்டுமோ செல்லமுடியும். இல்லையெனில் வழி தவறும் வாய்ப்புகள் கண்டிப்பாக உண்டு.

போதுமான ஓய்வு எடுத்துக்கொண்டு, காலை வேளையில் சுந்தரமகாலிங்கம் சந்நதியின் இடதுபுறம் வழிகாட்டியின் துணையுடன் ஏற ஆரம்பித்தோம்.கீழிருந்து மேலே தவசிப்பாறைப் பாறை மற்றும் ஏ.சி பாறையின் தோற்றம்.

தவசிப்பாறை செல்லும் வழியில் இருந்து சதுரகிரியை நோக்கிய பார்வை... படத்தில் இடதுபுறம் கீழ்பகுதி   குழுவாக தங்கி, சமைத்து ஓய்வெடுக்கும் இடம். முன் அனுமதி பெற வேண்டும். வலதுபுறம் கீழே இருப்பது சுந்தரமகாலிங்கம் சந்நதி வளாகம். அதற்கு நேர்மேலே இருப்பது சந்தனம்காலிங்க சந்நதி வளாகம்.

ஒற்றையடிப்பாதையில் பயணம் செய்யும்போது மரங்களின் அடர்த்தி நாம் எங்கு சென்று கொண்டு இருக்கிறோம் என்பதை குழப்பமாக்கி விடுகின்றன. இதுவே நாம் வழியில் குறுக்கிடும் வேறு ஒற்றையடிபாதைகளில் தடம் மாற வாய்ப்புகளை அதிகரிக்கிறது. சற்று செங்குத்தாக ஏற ஆரம்பித்தோம்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்குப்பின் தவசிப்பாறையை அடைந்தோம்.

பொதுவாக மனிதர்கள் கூட்டமாக எங்கெங்கு கால்வைக்கிறோமோ அந்த இடத்தின் இயல்பினை மாற்றிவிடுகிறோம்.  அதுபோலவே தவசிப்பாறை குகையும்.:))  குளிர்காலத்திலோ, அல்லது மழைநாட்களிலோ அங்கு கிடைக்கக்கூடிய தனிமையும், இருப்பும் மனம் தன்னுள் ஒடுங்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.

நீங்கள் தவசி குகையினுள் இருக்கும் சிவபெருமானை தரிசிப்பது மட்டுமே நோக்கமெனில் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் செல்லலாம். மனதை உள் ஒடுங்கும் தியான மார்க்கங்களில் ஈடுபாடு இருப்பின் கூட்டமில்லாத இதர நாட்களில் செல்லலாம். போதுமான நேரம் உள்ளே அமர்ந்து தியானத்தில்  இருக்கலாம்.
குகை வாசல் சுமார் ஒன்றரை அடி உயரமே இருக்கும். மெள்ள படுத்து, தவழ்ந்து நகர்ந்து சுமார் 15 அடி சென்றால் ஆள் மட்டும் நகர்ந்து நுழையும் அளவு உயரம் மட்டும் குறுகலாக இருக்கும். அதை அடுத்து வலதுபுறமாக அமர்ந்த நிலையில் நகரக்கூடிய அளவு சுமார் 10 அடி தூரம் பாதை விரிவடையும், அதன் பின்னர் குனிந்து செல்லக்கூடிய அளவு 5 அடி தூரம், தொடர்ந்து குனிந்தவாறே சென்றால் தவசிப்பாறை சிவலிங்கத்தை தரிசனம் செய்யலாம். உள்ளே ஆறு அல்லது ஏழுபேர் நிற்கலாம்.
வலதுபுறம் உள்ளே தீபஒளியில் மிகச்சிறியதாக சிவலிங்கம் தெரிகிறதா....!!!

கேமரா ஃபிளாஷ் போட்டு அருகில் சென்று எடுத்த படம..

தவசிப்பாறையிலிருந்து ஒட்டியே வலதுபுறமாக ஏறினால் தவசிப்பாறையின் மேல்பக்கத்திற்கு  வந்துவிடலாம். அந்தப் பாறையின் உச்சியில் ஒன்பது சிறுபாறை கற்கள் உள்ளன. பக்தர்கள் இதை நவக்கிரக பாறை என அழைக்கிறார்கள்.


படத்தில் இடது கீழ்புறத்தில் இருக்கும் சிறுபாறைகளுக்கே இந்தப்பெயர். இது தவசிப்பாறையின் மேல்பகுதி ஆகும். இதை ஒட்டி வலதுபுறம் இருக்கும் பாறை ஏ.சி பாறை கொஞ்சம் கீழிறங்கிப்பார்த்தால் போதும்.

சுமார் இருபதுபேர் செளகரியமாக அமரும் வகையிலான இடம். மேலும் கீழும் வலதும் இடதும் பாறை நீர் கசிந்து கொண்டு குளிர் காற்றில் ஊடுருவி எந்நேரமும் வீசிக்கொண்டே இருப்பதால் ஜில்லென்று ஏ.சி காற்று மாதிரி வீசிக்கொண்டே இருக்கும். வாய்ப்பு இருந்தால் இங்கும் தியானத்தில் இருக்கலாம். தவசிப்பாறைக்கு  வரும் பக்தர்கள் பலபேர்கள் இங்கு வருவதில்லை.:)

அதிலிருந்து சற்று மேலேறி இடதுபுறமாக நமது பயணம் தொடரும். ஒரு கிமீக்கு குறையாமல் நடந்து பின் இடதுபுறமாக கீழிறங்கத்துவங்கினால் திரும்ப அரைமணிநேரப் பயணம் செய்து நாம் அடைவது பெரிய மகாலிங்கம் சந்நதியின் பின்புறம் ஆகும். இயற்கையின் அற்புதங்களில் இதுவும் ஒன்று.

பிரமாண்டமாய் நிற்கும் சிவலிங்கம் போன்ற பாறையின் பின்பகுதியில் அரசமரத்தின் வேர்கள் சிவனின் ஜடாமுடிபோல் பற்றி படர்ந்து நிற்பதை நேரில் பார்க்கும்போது மனதில் ஏற்படும் உணர்வுகளை எழுத்தில் கொண்டு வரமுடியாதுதான்.
இதோ முன்பகுதி இந்த பெரும் பாறையின் கீழ் பெரிய மகாலிங்கம் வீற்றிருக்கிறார்.  கூடுதல் படங்களுடன் சதுரகிரி பிரபாகர் இடுகை


வேர்கள் எவ்வளவு பட்டையாய் பாறையோடு பாறையாய் இருப்பதைப் பாருங்களேன். அருகிலேயே திருவோட்டுப்பாறை ஒன்று இயற்கையாக அமைந்துள்ளது. அதாவது இயற்கையாய் அமைந்தவற்றை எல்லாம் நம் முன்னோர்கள் சிவரூபமாகவும், ஆன்மீக சம்பந்தமுடையதாகவும் பார்த்திருக்கிறார்கள் என்பதே இங்கு முக்கியம்.தொடர்ந்த மனநிறைவுடன் கீழிறங்கினோம், சுமார் முக்கால் மணிநேரத்தில் சுந்தரமகாலிங்கத்தின் சந்நதி அருகில் வந்து சேரலாம்.
தொடரும்....

அன்புடன்  நன்றி
http://arivhedeivam.blogspot.com
http://ganeshnlk.blogspot.com
http://eternalexpression.wordpress.com/2011/09/22/sathuragiri-yatra-a-divine-experience/

1 comment: